Sunday, February 3, 2013

Tamil Moli


கம்ப ராமாயணத்தில்  அறிவியல் சார்ந்த கருத்துகள்

உலக வெப்பமயமாதல்

இன்றைக்கு நம்மைத் தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு பொதுப் பிரச்சனை உலக வெப்பமயமாதல் (Global warming ). பாதிப்பு தீவிரமான பின் இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே வெகுவாகத் தூண்டப்பட்டு வருகிறது .உலகின் சராசரி வெப்பநிலை 57.2 o F (14 o C) லிருந்து 58o F(14.5o C வரை) உயர்ந்திருக்கிறது(3). இதற்குக் காரணம் சூரிய வெப்பம் பூமியில் உள்ளுறைவதேயாகும் என்றும் அப்படி உள்ளுறைவதற்கு பூகோளத்தின் சமநிலையில் மனிதர்கள் அச்சமின்றி தொடர்ந்து ஏற்படுத்தி வரும் சீர்குலைவுகளே என்றும் ஆய்வாளர்கள் 1980 களில் கண்டறிந்தனர்.

இது பற்றி கம்பர் தாடகை வதைப் படலத்தில் ஓரிடத்தில் குறிப்புணர்த்தி யுள்ளார் .மருத நிலத்தில் வளம் நிறைந்த வனம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது என்றும் அங்குள்ள மரங்களும் உயிரினங்களும் கொடிய மனமுடைய தாடகையால் அழிவுற அப்பகுதி வெப்பமிக்க காடாக மாறியது என்றும் கம்பர் கூறியுள்ள கருத்தில் அவரின் அறிவியல் சிந்தனை வெளிப்பட்டுத் தெரிகிறது  இதன் மூலம் அவரே உலக வெப்பமயமாதலை உலகோர்க்கு முதன் முதலாய் குறிப்புணர்த்தியவர் என்றே சொல்லத் தோன்றுகிறது. காட்டின் அழிவும் ((deforestation) நிலத்தின் வெப்பமிகுதலும் தொடர்புடையன என்ற கம்பர் கருத்து 1980 களில் சுற்றுச் சூழலியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறிந்த உண்மைக்கு ஏற்ப இருக்கிறது.மன்னுயிர் அனைத்தையும் அழிக்கும் இப்போக்கிற்கு மூல காரணமாக விளங்கும் தீயவர்களை அவர்கள் பெண்ணென்றாலும் அல்லது யாராக இருப்பினும் அழித்து விடவேண்டும் என்று கூறி உலக வெப்பமயமாதலுக்குத் தீர்வு சொன்ன முதல்வரும் கம்பர் தானோ என்று வியக்கத் தோன்றுகிறது

   

உந்தம் மாறாக் கோட்பாடு

தாடகை வதைப் படலத்தில் ,தாடகை அங்கிருக்கும் மரங்களைப் பிடுங்கி எடுத்தும் ,பாறாங்கற்களை புரட்டி எடுத்தும் இராமன் மீது எறிய மிகவும் விரைந்த வேகத்தில் செல்லும் அம்புகளை எய்து அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கினான்.இதை

"கல்லின் மாரியைக் கை வகுத்தாள் ; அது                                                                         வில்லின் மாரியின் ,வீரன் விலக்கினான் "

என்று வர்ணித்த கம்பர் .அம்பின் வேகத்தை தவறாமல் குறிப்பிடுகின்றார் அதன் கடிய வேகத்தை "சொல்லொக்கும் கடிய வேகச் சுடு சரம் " என்று ஏவுகணை அறிவியலார் போல தெரிவிக்கின்றார் .இலக்கின் தன்மைக்கேற்ப ஏவுகணைகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படை தெரியாவிட்டால் ஒருவரால் இப்படி எய்த அம்பிற்கு வர்ணனை கொடுக்க முடியாது .

ஒரு சிறிய அம்பால் எங்ஙனம் ஒரு மரத்தையும் ,பாறாங்கல்லையும் பிளந்து நொறுக்கமுடியும் .என்ற ஐயப்பாடு அறிவியல் கற்றோருக்கும் வருவதுண்டு . வெறும் கற்பனை என்று சொல்லி நம்ப மறுப்பார்கள் .ஆனால் இது அறிவியலில் சாத்தியமே என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை (Theory of Relativity) இன்றைக்குத் தெரிவித்திருக்கின்றது.ஏறக்குறைய ஒளியின் வேகத்தில் இயக்கிச் செல்லும் ஒரு சிறிய நூல் ,அது பெற்றிருக்கும் உயரளவு உந்தத்தால் (Momentum) ஒரு தடித்த மரத்தைக் கூட ,ஒரு கத்தி வெண்ணையை வெட்டுவதைப் போல வெட்டிச் சாய்த்து விடும் என்பது உந்தம் மாறாக் கோட்பாட்டு விதி..அம்பு சிறியதே ஆனாலும் அதை விரைந்து செலுத்த, வேகம் காரணமாக அது பெறும் கூடுதல் உந்தம் அதற்கு மிகுந்த வலிமையைத் தருகின்றது.இந்த அறிவியல் உண்மையைத் தெரிந்து                   வைத்திருந்ததால்தான் கம்பர் ,இராமன் தன் அம்புகளைக் கடிய வேகத்தில் செலுத்தி வெற்றி கொண்டான் என்று எழுதினார் போலும் .

ஆரணிய காண்டத்தில் ,விராதன் வதைப் படலத்திலும் கரன் வதைப் படலத்திலும் மெல்லிய அம்பினை கடிய வேகத்தில் செலுத்தி போதிய ஆற்றலூட்டி தன்மீது எறியப்படும் நிறை மிக்க மரத்தையும் பாறைகளையும் தடுத்து இராமன் தற்காத்துக் கொள்கின்றான் .இதில் வரும் வரிகளும் கம்பரின் அறிவியல் திறத்தை எடுத்தியம்புவதாக இருக்கின்றது..

பரிணாமக் கொள்கை

மாரீசன் வதைப் படலத்தில், பிற்காலத்தில் டார்வினால் கண்டறியப்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றி இரத்தினச் சுருக்கமாக கம்பர் தெரிவித்துள்ளார்..மாரீசன் ,இராவணனின் வற்புறுத்தலால் மாய மான் தோற்றத்தில் சீதை கண்படும்படி தோன்றுகின்றான். பொன்மான் பொய் மானோ என்று ஐயப்பட்ட தம்பியை பார்த்து இராமன் கூறும்போது இந்த வரிகள் காணப்படுகின்றன .மன்னுயிர்கள் பல்லாயிரம் கோடியாக இன்றைக்கு விரிந்துள்ளன. உயிரினக் கலப்பில் இல்லாதன யேதுமில்லை

“பல் ஆயிர கோடி பரந்துளவால்                                     
இல்லாதன இல்லை- இளங்குமரா”

கம்பரின் ஆழ்ந்த அனுபவங்களின் அழுத்தமான உச்சரிப்புக்களே அறிவியல் வரிகளாக மலர்ந்திருக்கின்றன என்பதைப் பறை சாற்றுவதற்கு இவ்வெடுத்துக் காட்டுகள் போதுமானதாகும்..கம்பரால் எடுத்தாளப் பட்டிருக்கும் பழமொழிகள் அவருடைய பல்துறை அறிவியல் புலமையைத் தெரிவிக்கின்றன .விமானம் பற்றி பல விடங்களில் கூறியிருப்பதால் தொழில் நுட்பம் பற்றியும் அவர் அறிந்திருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.