Thursday, November 5, 2026

  குறிக்கோளின்றி பிரபஞ்ச வெளியில்

சுற்றித் திரிந்த கரும் பொருளொன்று  

உலகிலோர் உயிரினமாய்  பிறக்கவேண்டுமென்று   

ஒருநாள் இறைவனிடம் கெஞ்சிக் கேட்டது  

 

ஓரறிவு , ஈரறிவு   ,மூவறிவு போதுமா  ,

நாலறிவு,ஐந்தறிவு,ஆறறிவு  வேண்டுமா? .

அறிவிற்கும் பிறப்பிற்கும் என்ன தொடர்பு

அடியேனுக்கு விளக்கம் வேண்டுமே

 

மெய்யுணர்வு மட்டும் என்றால் ஓரறிவு

புல்லாய் பிறந்து உணவாய் மடிவாய்

உலகைச் சுற்றிப்பார்க்க உனக்கு வழியில்லை

பிறப்புமுதல் இறப்புவரை ஒரே இடம்

 

மெய்யுணர்வோடு சுவையும் சேர்ந்தால் ஈறறிவு

சிப்பியாகப் பிறந்து முத்தாய் இறப்பாய்

ஊர்ந்து ஊர்ந்து உலகைச் சுற்றிவர

ஒருவர்க்கு ஒரு பிறப்பு  போதாது

 

இவற்றோடு மோப்பமும் இணைந்தால் மூவறிவு

எறும்பாய் பிறந்து கூட்டமாய் அழிவாய்

உயிர் உடலைவிட்டுப் பிரியும் வரை

உழைப்பதைத் தவிர சுகமொன்றும் இல்லை

 

காணும் திறனும் கூடினால் நாலறிவு

நண்டாய்ப் பிறந்து நாரைக்கு உணவாவாய்

தேனீயாய்ப் பிறந்து  சுறுசுறுப்பாய்ச்  சுற்றினாலும்

தேடித் சேர்த்த தேனுக்குச் சொந்தமில்லை

 

செவியுணர்வும் சேர்ந்துக்கொண்டால் ஐயறிவு

விலங்காய்ப் பிறந்து விரும்பிய இடம் போகலாம்

விரைந்து பறக்க பறவையாய்ப் பிறக்கலாம் .

இனப்பெருக்கம்  மட்டுமே  இல்வாழ்க்கை   

 

பகுத்தறிவும் பங்குகொண்டால்  ஆறறிவு

மனிதனாய்ப் பிறந்து   மனம்போல வாழலாம்                    

குறையறிவு கொண்டோரை அடக்கி  ஆளாமல்

நிறையறிவால் பகுத்து வாழ்வதே சிறப்பு