Friday, January 6, 2012

valarum Ariviyal Tamil


திருக்குறளின் தெய்வீகக் குரல்

திருக்குறளின் அறம்,பொருள்,இன்பத்தில் இல்லாத ஒரு மறைபொருள்
பாயிரத்தில்  இருக்கின்றதோ என்ற சிந்தனை நம் எண்ணத்தில்
நிலை கொண்டிருப்பதால் ,"திருக்குறளில் பாயிரம் "என்ற
தலைப்பைக் கட்டுரைப்போட்டிக்குத் தேர்வு செய்திருக்கின்றார்கள்
போலும்.

திருவள்ளுவர் மற்றும் அவருடைய ஒரே வாழ்நாள் படைப்பான திருக்குறள்
பற்றிய உண்மையான விவரங்கள் காலத்தின் கோலத்தில் நமக்கு முழுமையாகக்
கிடைக்காமல் போனதால் புதிதாக எதையோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வத்தில் அதைப்  பற்றிய ஆய்வை ,அடிப்படை ஆதரங்கள் ஏதுமில்லாமல்
மேற்கொண்டு, வெறும் ஊகக் கருத்துகளையே அள்ளித் தெளித்து  வருகிறோம்.

பாயிரம் என்பது வள்ளுவரின் படைப்பல்ல ;அது வேறொருவருடைய
இடைச் சொருகல் என்று வாதிட்டாலும்,அம்முயற்சியில்  மறைந்திருக்கும் அந்த
படைப்பாளி யார் ,அவர் தன்னை மறைத்துக் கொண்டு அப்படிச் செய்தமைக்கு
யாது காரணம் என்பதையெல்லாம் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகக் கூற
முடியாத நிலையே இன்னும் இருக்கிறது.

நோபல் பரிசு பெற்ற அறிவியலார் ,அவர் தம் ஆராய்ச்சியில் எவ்வளவு
முதன்மையானவராக விளங்குவாரோ ,அது போல வள்ளுவரும் அவர் தம்
படைப்பில்முதல்வராக ,பல் துறை முனைவராக விளங்குகிறார் .வள்ளுவர் ஒரு
பல்துறை அறிஞர் என்பதற்கு ,திருக்குறளின் 133  அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள
நுட்பமான பல்துறை சார்ந்த கருத்துகளே போதுமான சாட்சி

ஆன்மிக வாதிகள் தங்கள் கருத்துகளை இலக்கியப் படைப்புகள் மூலம்
மக்களுக்கு எடுத்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டார்கள் . அந்த வகையில்
வள்ளுவரும் ஓர் ஆன்மிக வாதியே . ஓர் ஆன்மிகவாதி அறவியல் மட்டுமின்றி,
இல்லறவியலையும் அரசியலையும் வெகு இயல்பாகவும், துல்லியமாகவும்
விவரிக்கின்றார் என்றால்,அவருடைய படைப்பாற்றல் அளவிட்டறிய
முடியாததாகவே இருக்கும் .மிக சிறந்த அறிஞர்களுக்கு இது ஒரு பொதுத் தன்மையே .
திருவள்ளுவர் ஓர் அறிவியலாரும் கூட என்பதை குறளின் பாயிரத்தில் கூறப்பட்டுள்ள
கருத்துகளே ஒருசேரப் பறைசாற்றுகின்றன .

பேரளவிலான பேரண்டமாக ,அண்டமாக ,விண்மீனாக, விண்மீனைச் சுற்றும் கோளாக
இருந்தாலும், அல்லது நுண்ணிய மூலக்கூறாக ,அணுவாக ,அணுக்கருவாக ,அணுக்கருவைச்
சுற்றும் அடிப்படைத் துகளாக இருந்தாலும் எல்லாம் இயற்கையின் இயக்கமே. இதில்
பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நம் வாழ்க்கையும் வேறுபட்டதில்லை.
துறைவாரியாகப் பிரிந்து அறிவியல் வளர்ந்த இன்றைய  கால கட்டத்தில் இதை
எல்லோரும் அறிந்திருந்தாலும் ,முழுமையாகப் புரிந்து  கொண்டு வாழ்பவர்கள் வெகு
சிலரே .நம்முடைய புரியாமையே நம்மிடையே கூடிவாழ்வதை விடக் கொன்று வாழும்
போக்கைத்  தூண்டி வருகிறது.

பிறப்பும் இறப்பும் இயற்கையாக இருப்பதைப் போல ,இடைப்பட்ட குறுகிய
வாழ்க்கையும் இயற்கையாக இருந்தால் இனிமைக்கு யாதொரு குறையுமில்லை .இதற்கு
இறவனைப் புகழ்ந்து துதி பாடுவதை விட இயற்கையைப் புரிந்து கொள்வது மிகவும்
அவசியமாகும் .இதை முழுமையாக  உணர்ந்து கொண்ட   திருவள்ளுவர் ,தன்னுடைய
திருக்குறள் நூலுக்கு அளித்தமுன்னுரையே இந்த பாயிரம் எனலாம்.

திருக்குறளின் கடவுளுக்கு எவ்வித உருவமும் இல்லை,பெயர் ஏதும் வழக்கப்படவில்லை,
ஆனால் மக்கள் முயன்று பெறவேண்டிய மென்மையான நற்குணங்கள் மட்டும் கடவுளின்
தன்மையாகக் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டு இந்த பேரண்ட
வெளியில் இருக்கக் கூடிய ஒன்று இயற்கை மட்டுமே .எனவே இயற்கையையே
திருவள்ளுவர் இறைவனாக உருவகப் படுத்திக் கொண்டார் எனலாம். இயற்கையை
இறைவனாக்கித் தொழுவதைவிட ,அதாவது இயக்கத்தை ஓய்வு படுத்துவதை விட ,
செயலை வெறும் செயலின்மையாக்கி வெற்றுச் சொல்லாக்குவதை விட ,இறைவனை
இயற்கையாக்கி உணர்வது ,அதாவது ஓய்வை இயக்க நிலைக்கு மாற்றுவது ,சொல்லைச்
செயலாக்குவது ,சாகாத சமுதாயத்திற்கு காலமெல்லாம் நலம் பயக்கும் என்ற
கருத்து திருக்குறளின் முதல் அதிகாரமான இறைவணக்கத்தில்  எதிரொலிப்பதைக்
காணமுடிகிறது

திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளின் குணங்களைக் குறிப்பிட வாலறிவன் ,
மலர்மிசை ஏகினான் ,வேண்டுதல் வேண்டாமை இலான் ,பொறிவாயில் ஐந்தவித்தான் ,
தனக்குவமை இல்லாதான் ,அறவாழி அந்தணன் ,எண்குணத்தான் போன்ற  அடைமொழிகள்
பயன்படுத்தப் பட்டுள்ளன

வாலறிவன் என்றால்  குழப்பம் தராத தூய அறிவினை,மெய்யறிவினை உடையவன்
என்றும், மலர்மிசை ஏகினான் என்றால் தன மனதில் மென்மையான எண்ணங்களை
ஏந்தியவன் என்றும் ,வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் ,விருப்பு
வெறுப்பு அற்றவன் என்றும் ,பொறிவாயில் ஐந்தவித்தான் என்றால் புலன்களை
அடக்கி ஆள்பவன் என்றும் ,தனக்குவமை இல்லாதான் என்றால் ,ஒப்பிட்டுச் சொல்ல
இணையாக வேறொன்றும் இல்லாதவன் என்றும் அறவாழி அந்தணன் என்றால்
அறவழியே என்றும் தன்வழி என்று உறுதி  கொண்டவன் என்றும் ,எண்குணத்தான்
என்றால் சான்றோர்க்குரிய எட்டுக் குணங்களையும் முழுமையாக பெற்றவன் என்றும்
பொருள். இதிலிருந்து திருவள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்பது  கூட்டுச் சமுதாயம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்க மனிதர்கள் பெற்றுக்கவேண்டிய  நல்ல  குணங்களின்
மொத்த வடிவம் என்றும், அதற்க்கு எனத் தனி உருவம் ஏதும் இல்லை என்றும்,
இறைவணக்கம் என்பது அந்த நல்ல குணங்களைப் நாமும் பெற்றுச் சிறக்க
அதைப்பற்றி நினைத்து ,முனைந்து அவ்வழி நடக்க முற்படுவதாகும் என்றும் கூறலாம்  .

உருவ வழிபாட்டை விட ,உருவமில்லா வழிபாடு இறைத்தத்துவத்தைக் கூறும்
இயற்கையை இயல்பாக அறியத்தூண்டுகிறது .எனினும் சென்றையும் இடத்தை விடச்
செல்லும் வழியே முக்கியமாகப் போனதால் ,அந்த இடம் கண்ணுக்குத் தென்படாமல்
போனது மட்டுமில்லை ,அது எந்த இடம் என்பதையே மறந்து போய்விடும் சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டோம் .அறியாத செல்லுமிடங்களுக்குத் தெரியாத வழித்தடங்கள் ,
நம்முடைய வாழ்க்கையின்  போக்கையே மாற்றிவிடுகின்றன.

திருக்குறளுக்கு இறைவனின் புறத்தோற்றம் ,பெயர், மூலம் இவைகளெல்லாம்
முக்கியமில்லை. இறைவனை ,இறைவன் என்று ஏற்றுக் கொள்ள அடையாளமாக
இருந்த சிறப்பியல்புகளையே கருத்திற் கொண்டது. அகவியல்  பண்புகளை அறியாமல்
வெறும் புறவியல் பண்புகளினால் ஒன்றின் இயல்பை முழுமையாக அறிந்து பயனீட்ட
முடியாது என்பதால்,திருக்குறள் இறைவனின் அகவியல்  பண்புகளை மட்டுமே
முழுமையாக மக்களுக்குத் தெரிவிக்க முயலுகிறது. இறைவன் இயற்கைதான்
என்றாலும்  மனிதர்களுடைய அணுகுமுறைகளே இறைவனை இல்லாதவானாக்கி விடுகின்றன
என்ற மறைபொருளை இதன் மூலம் குறிப்புணர்த்தியுள்ளார் .

 இயற்கையின் முழு ஒத்துழைப்பினால் பெற்ற இப்பிறப்பைப் பயனுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டும் என்றால், அது நமக்குப் பயனளித்த இயற்கையை அப்படியே
விட்டுவைப்பதுதான் .இதன் நோக்கம் ,அது நம்மைப் போல பிறர்க்கும், பிறரைப்
போல நமக்கும் இம்மையிலும் மறுமையிலும் தொடர்ந்து பயனளிப்பதை
மேம்படுத்துவதாகும் .இதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால்
இயற்கையை நேசிப்பதாகும் ,அதுவும் பிறந்த அந்தக் கணத்திலிருந்தே ,இறைவனின்
அகவியல் பண்புகளைத் தெளிவாக அறிந்து கொண்டோர் மட்டுமே ,இயற்கையைப்
போற்றி தம் வாழ்கையை இயற்கையோடு இணைந்து செல்லுமாறு அமைத்துக் கொண்டு
இனிமையாகக் கழிப்பர். அந்த அடிப்படையில் கடவுள் வாழ்த்து திருக்குறளின்
முதல்
அறநெறியாகச் சொல்லப்பட்டிருக்கிறது .உலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் ,தங்களது
இம்மையும் மறுமையும் இனிதாய் இருக்க ,இறைவன் என்ற புனைப் பெயரில்
இயற்கையைப் போற்றி வணங்க வேண்டும் என்பது கடவுள் வாழ்த்தில் வரும் பத்துக்
குறள்களும்ஒரு சேரக் கூறுகின்றன. வாழ்த்துதல் ,வணங்குதல் ,அடிசேருதல் ,போற்றுதல்
என்பன யாவும் உயர்வான ஒன்றைப் பற்றி நினைத்து அந்த ஒன்றின் வழி நிற்றலைக்
குறிக்கும் என்று பரிமேலழகர் குறிப்பிட்டுள்ளது இதற்கு இணக்கமாய் இருக்கிறது .

 இனிக் குறளின் முதல் அதிகாரமான் கடவுள் வாழ்த்தில் வந்துள்ள பத்துக் குறள்களில்
மிளிரும் இயற்கையை ,கருத்துகளில் செயற்கைக் கலப்பு ஏதுமின்றி அறிந்து கொள்ள
முயல்வோம் .

 குறள் -1

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"  .

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன .அதுபோல
உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது .

கடவுளை இயறகையாகக் கொண்டால்.........

அகரம் தொடங்கி எல்லா எழுத்துக்களினாலும்  குறிப்பிடப்படுகின்ற பொருட்கள்
யாவும் உலகிற்கும் முதலான இப்பேரண்ட வெளியில் தோன்றி இருப்பதற்கு
மூலாதாரம் இயற்கையேயாகும்

இதன் உட்பொருள் எல்லாமே கடவுள் ,கடவுள் தான் எல்லாம் என்பதாகும்.
அதாவது எழுத்துக்களுக்கெல்லாம் எப்படி அகரம் முதலாய் அமைந்ததோ
அதுபோல இவ்வுலகிற்கு இயற்கை முதலாய் அமைந்தது ..

கடவுளிடம் இருப்பதாக நாம் கற்பிக்கும் எல்லாக் குணங்களும் இயற்கைக்கு
மட்டுமே ஒரு சேரப் பொருந்தி வருகின்றன .இயற்கையைப் போல ஆதியும் அந்தமும்
கடவுளுக்கும் இல்லை; அளவற்ற சக்தி கடவுளுக்கும் உண்டு .வேண்டியவன்
வேண்டாதவன் என்று வேற்றுமை பாராட்டாமல் உதவி செய்யும் மனப்பக்குவம்
கடவுளிடமும் உள்ளது. பன்முகத் தோற்றம் கடவுளுக்கும் பொருந்தும் .
இவ்வொற்றுமைகள் .கடவுளும், இயற்கையும் ஒரே மூலத்தின் இரு வேறு பெயர்கள்
என்பதைத் தெரிவிக்கின்றன .

குறள் -2

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்"

தூய அறிவுடைய இறைவனின் திருவடிகளைத் தொழா தவர்களின் கல்வியால் யாதொரு
பயனும் இல்லை.

இறைவன் ஒரு தத்துவம் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களே இறைவனைப்
புறத்தே தேடிக் கொண்டிருக்கின்றார்கள் .நாம் எதிர்பாக்கும் மனிதன் எப்படி
இருந்தால் இந்தச் சமுதாயம் சாகாதிருக்கும்  என்று நினைத்துப் படைக்கப்பட்ட
கற்பனை மனிதனே இறைவன் .சான்றோர்களையும் ,மெய்யறிவுடையோர்களையும்
இறைவனுக்கு ஒப்பாகப் பேசுவதிலிருந்து இந்த உள்ளுணர்வு புலப்படுகிறது.
மெய்யறிவுடைய இயற்கையைப் பாதுகாக்க வில்லையெனில் ,கற்றதினால்
யாதொரு பயனும் இல்லை .நிழலான இறைவனால் விளக்குவதை விட ,மெய்யான
இயற்கையைக் கொண்டு விளக்குவதே திருவள்ளுவரின் நோக்கமாகும் .

குறள் -3

"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"

மலரில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளைத் தொழுகின்றவர் இவ்வுலகில்
நிலைத்து வாழ்கின்றார் .

வன் தன்மையை மறந்தும் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த விரும்பாத காரணத்தினால்
பூவைப் போன்று மென்மனதுடைய அறநெறியாளர்களை போற்றிப் பணிந்தால்
அவர் புகழ் நிலத்து நிற்கும் .

குறள் - 4

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனைப் பின்பற்றி ஒழுகுவோர்க்கு என்றைக்கும்
துன்பம் இல்லை

விருப்பு வெறுப்பிலாத இயற்கையைப் போல வாழும் ஒருவர்க்கு என்றைக்கும்
துன்பம் வருவதில்லை. சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு உண்டாகுமென்றால்
தன் விருப்பத்தைக் கூட வெறுக்க வேண்டும். சமுதாயத்திற்கு அனுகூலமானது
என்றால் தன வெறுப்பைக் கூட விருப்பமாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு
வேண்டுதல் என்பதும் வேண்டாதது என்பதும் அர்த்தமற்றது .இந் நிலையே
வேண்டுதல் வேண்டாமை இல்லா நிலை என்று கூறலாம். இவர்களே சமுதாயத்தின்
காவலர்கள் என்பது திருவள்ளுவரின் கருத்து..

குறள் -5

"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

துன்பத்தைத் தரக்கூடிய இரு வகையான  வினைகளை யாற்றும் நிலை இறைவன்
என்ற மெய்ப்பொருளை உணர்ந்து உணர்த்துவோர்க்கு வருவதில்லை. தனக்கு
மட்டுமின்றி எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற வினை  நல்வினை ,யாரேனும்
ஒருவர்க்கு தீமைதரக்கூடிய வினை  தீவினை .நல்வினைகள் சமுதாயத்தை
வாழவைக்கும், தீவினைகள் அதை வேரறுக்கும் .

ஒரு வினை செய்யப்படுவதற்குக் காரணம் வினைபயனே .அது தரும் மகிழ்ச்சியை
நுகர விரும்பும் எல்லோரும் வினையாற்ற விரும்புகின்றார்கள் .ஆனால்
வினைப்பயனுக்காகவே வினையாற்றினால் காலப்போக்கில் எல்லோருடைய
எண்ணங்களிலும் தன்னலச் சிந்தனைகளே மேலோங்கும்  இது பகைமையை வளர்ந்து
வாழ்வின் இனிமையை அழித்துவிடும் .அதனால் இக்குறள் வழியாக
வள்ளுவர் கூற நினைத்த கருத்து வாழ்க்கையை இருளூட்டக் கூடிய வினைப்பயன்
கருதிச் செய்யப்படுகின்ற இரு வினைகளையும் , இயற்கையைப் பின்பற்றி
வாழ்வோர் தான்
செய்யுமாறான வாய்ப்பு வராமல் பார்த்துக் கொள்வர் .

குறள் -6

" பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எவர் இறைவனைப் போல
வாழ நினைக்கின்றார்களோ ,அவர்களே நிலைபெற்ற நல்வாழ்க்கை பெறுவார்

 ஐம்பொறிகளின் கட்டுப்பாடான ஆசைகளின் வரம்பிற்கு அப்பாற்பட்ட முரட்டுத்தனமான
ஆசைகளை அடக்கியது இயற்க்கை  அது  போன்ற  குணத்தைப் பெற இயற்கையை
போற்றி இயற்கையாக வாழ நினைக்க வேண்டும்.உண்மையாகவே பொறிகளின்
வாயிலாக விளைந்த ஆசைகளை மட்டுப்படுத்தி வாழ்வார்கள் நீண்ட நாள் வாழும்
வாய்ப்பைப் பெறுகின்றார்கள் .நீண்ட நாள் வாழ்கின்றவர்  ஒழுக்க நெறி நின்றவராவார் .
எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் சமுதாயம்  நற்பயனடைகின்றது. .

குறள் -7

"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"

உவமை இல்லாதவாறு பல சிறந்த குணங்களைப் பெற்றிருக்கும் இறைவனைப்
போற்றாத வரின் மனக் கவலைகளைப் போக்க முடியாது

 உவமை இல்லாதவாறு பல சிறந்த தன்மைகளை உடைய  இயற்கையைப்
போற்றாவிட்டால் ,அதைப்போல நாமும் கவலைகள் யற்று  பிறருடைய மனக்
கவலைகளைப் போக்க முடியாது.மனதில் தோன்றும் மனக் கவலைகளுக்கு
மருந்தொன்றும் இல்லை .மிருகங்களும், தாவரங்களும் இறைவனைத் தொழுவதில்லை .
ஏனெனில் அவைகளெல்லாம் தங்களுடைய வாழ்க்கையை இயற்கையோடு இணைந்து
செல்லுமாறு இயற்கையாய் வாழ்கின்றன.

இயற்கைக்குப் புறம்பான எந்தப் பரிணாம வளர்ச்சியும் பயனளிப்பதில்லை .அது
காலப்போக்கில் பிறவற்றை அழித்துத் தானும் அழிந்து போகும் .இதற்க்கு விதிவிலக்கு
இல்லை. மனிதர்கள் தாம் பெற்ற ஆறறிவில்  மெய்யறிவைப் புறக்கணித்து வருவதால்
உயிரினங்களில் அவன் மட்டுமே இயற்கையை மீறிய செயற்கை நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகிறான்.இதனால் அழிவு என்பது ஒரு காலகட்டத்தில் பேரளவில்
நிகழக் கூடிய சூழ்நிலை
ஏற்படும். இது ஆக்கத்தில் மறைந்திருக்கும் அழிவு .அதனால்தான் தனக்குவமை இல்லாத
இயற்கையைப் புரிந்து கொண்டு இயற்கையாக வாழ்ந்தால் யாருக்கும் மனக்கவலை
இல்லை என்று திருவள்ளுவர் கருதினார் போலும் .

குறள்-8

"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்குக் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது"

இக் குறள் இயற்கையையும் .இறைவனையும் அறக்கடவுளாக வர்ணிக்கிறது. .அதன்
வழியைப் பின்பற்றாது பிறவழி செல்வோர் வாழ்கையை இனிமையாகக் கடக்க
முடியாது என்ற கருத்தை எடுத்தியம்புகிறது . அறநெறி என்பது
ஒவ்வொருவரிடத்திலும் காட்டாயப்படுத்தப்பட்டு வருவதன்று .அது எதற்காகத்
தேவை என்பதை உணர்ந்து
இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலே அறநெறி தழைக்கும்.அதற்கு எல்லோருக்கும்
பாடமாகவும் ,வழிகாட்டியாகவும் இருப்பது இயற்கையே .

இக்குறளில் எடுத்தாளப் பட்டுள்ள அந்தணர் முரண்பாடுடைய சொல் போலத் தோன்றலாம்.
இதற்கு அந்தச் சொல் பூணுல் அணிந்து,வேதங்கள் கற்ற, பார்ப்பன குளத்தில் பிறந்த
ஒரு குறிப்பிட்ட சமுதயத்தினரைக் குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டு வருவதுதான். .
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அச் சொல்லுக்கு வேறு பொருண்மை இருந்திருக்கலாம்.
(நாற்றம் என்ற சொல் சொல் பொருள் மாறிப்போனதைபோல) அல்லது அத்தகைய
சிறப்புடைய சொல்லுக்குத் தகுதியுடையவர்கள் தாங்களே என்று
வடநாட்டிலிருந்து புதிதாய் குடியேறியவர்கள் அச்சொல்லைத் தத்
தெடுத்திருக்கலாம்  இக் குழப்பத்திற்க்கான விடையை திருவள்ளுவரே நீத்தார்
பெருமை எனும் அதிகாரத்தில் அந்தணர் யார் என்று விளக்கியுள்ளார்.

குறள் -9

"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"

எல்லா உயிரினங்களும் இனிதே வாழ, எட்டுக் குணங்களையும் ஒரு சேரப்
பெற்றிருக்கின்ற இறைவனை வணங்காதாரின் குறிக்கோளும் அதைப் எட்டும்
வழிமுறையும் தீயனவாகவே
இருக்கும் என்று இக்குறளுக்குப் பொருள் உரைக்கலாம். .

இறைவனை இயற்கை என்றும் ,இயற்கையை இறைவன் என்றும் கூறும்போது
இந்த எட்டுக் குணங்களும் இரு அமைப்புகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்.
இறைவனின் ,ஆதியும் அந்தமும் இல்லாமை, அளப்பரிய ஆற்றல் ,வரையறுக்க
முடியாத திறமை,எங்கும் நிறைந்திருத்தல்  போன்ற குணங்கள் ,இயல் வாழ்க்கையில்
மனிதர்கள் எவ்வளவு முயன்றாலும், பெறமுடியாத, பெறவே முடியாத குணங்களாகும்.
இவையாவும் இறைவனும் இயற்கையும் மனிதர்களைக் காட்டிலும் வலிமையானவர்கள்
என்பதை தெரிவிக்கக் கற்பிக்கப் பட்ட தனிபெருஞ் சிறப்புகளாகும். ஒரு
மனிதன் எவாளவு முயன்றாலும் தன வாழ்நாளில் பெறவே முடியாத இக் குணங்களைப்
பெறவேண்டி எவரும் வலியுறுத்த மாட்டார்கள்.எனவே என்குனத்தில், உலகியல்
வாழ்க்கைக்கு ஒவ்வாத
இத்தைய குணங்களுக்கு இடமில்லை என்றே முடிவு செய்யாலாம்.

மெய்யறிவைப் பெற விரும்புதல், ,எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்,,தீயன
ஒதுக்கி தூய்மையான மனதைப் பெறுதல் ,ஈகை,கைம்மாறு கருதாது ஒப்புரவு செய்தல்,
நடுவு நிலைமை மற்றும்  ஒருபாற்கோடாமை பேணுதல் ,பற்றற்று செயலாற்றுதல்,
பொறுமை,அடக்கம் கொண்டிருத்தல் போன்றன் குணங்களே மக்களிடம் திருவள்ளுவர்
எதிர்ப்பார்த்தது இந்தக் குணங்கள்இயற்கையிடம் இயபாகவே உள்ளது . இறைவனிடம்
ஏற்றப் பட்டுள்ளது.

குறள்-10

"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்" .

இறைவனை நினைத்து வாழ்கின்றவர்கள் பிறவியை மகிழ்ச்சியாகக் கடக்கின்றார்கள் .
மற்றவர்கள் அப்படி இல்லை.. இயற்கையை  நேசித்தவர்கள், நேசிக்காதவர்களுக்கு உள்ள
வேறுபாடும் இதுதான்.

இயற்கையின் திருவிளையாடல்களைக் கண்டு திகைத்துத் திணறிய ஆதிகாலத்து
மனிதர்கள்,புரிதலும், நல்லிணக்கமும் வேண்டி இயற்கையை இறைவனாக்கித்
துதித்தார்கள் .ஆனால் இறைவன் வேறு ,இயற்கை வேறு. .முன்னது காட்சி ,உருவமானது ,
பின்னது பிம்பம் ,உருவகமானது .இயற்க்கை என்பது செய்முறைக் கல்வி ,இறைவன்
என்பது தத்துவக் கொள்கை.மனப்பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே இவையிரண்டிற்கும்
புறத்தே தெரியாத தொடர்பை அகத்தே அறிவர். .அப் பணியை அன்றைக்கே மௌனமாய்
செய்து காட்டியவர் திருவள்ளுவர். அதற்கு திருக்குறளின் இந்தப் பாயிரமே
சாட்சி.










valarum Ariviyal Tamil

குறளறிவியல்- வான் சிறப்பு

பிறந்தது முதல் இறக்கும் வரை வாழும் வாழ்க்கை முழுமைக்கும் தேவையான அறநெறிகளை மென்மையான
அறிவுரைகளாக்கிக் கூறுவது திருக்குறள். இதில் வரும் கருத்துகள் யாவும் இயற்கையின் சாயலில்
சொல்லப்பட்டிருப்பதால் இயற்கையைப்போல  அவை என்றும் மாறாத் தன்மை கொண்டு விளங்குகின்றன .
எல்லோருக்கும், எக்காலத்திற்கும் ஏற்புடைய கருத்துகளாக இருப்பதோடன்றி, அறிவியல் வாசனையையும்
ஆங்காங்கே கொண்டிருப்பது இதற் சிறப்பாகும் .குறளில் அறிவியல் என்பது தமிழுணர்வு மிக்கோரால்
வலிந்து கற்பிக்கப்படும் ஒரு போக்கு என்று கூருவாருளர் .ஆனால் உண்மைநிலை அப்படியில்லை .
வள்ளுவரைப்போல இயற்கையை நேசிக்கும் ஒருவரின் சிந்தனையில் அறிவியல் தொடர்புடைய கருத்துகள்
வெகு இயல்பாக வெளிப்பட்டுத் தோன்றுவதும் ,அவர்தம் படைப்புகளில் இடம்பெறுவதும் இயற்கையே .

கலையானாலும் ,அறிவியலானாலும் அவைகளுக்கு மூலமாக இருப்பது இயற்கையே .கலை என்பது
இயற்கையை விவரிக்கும் கற்பனைகளின் ஒரு மகிழ்ச்சித்  தோற்றம் .அறிவியல் என்பது இயற்கையை
ஒரு சட்டத்திற்குள் விளக்கும் முயற்சிகளின் தொகுப்பு. .களையும் ,அறிவியலும் ஒரே இயற்கையின்
ஒரு வேறு வடிவங்களே. வேறு பட்டுத் தோன்றும் இவையிரண்டும் உயரெல்லைகளில் ஒன்றிணைந்து
விடுகின்றன. அப்போது கலைக்குள் அறிவியலையும், அறிவியலுக்குள் கலையையும் காண முடிகிறது.
இக் கண்ணோட்டத்தில் திருக்குறள், அறிவியல் பொதிந்த ஒரு கலைப்படைப்பாகத் தோன்றுகிறது.
குறட்பாக்களில் அறிவியல் கருத்துகள் செறிந்திருப்பதைக் குறள் மற்றும் அறிவியலில் ஒரு சேர
ஈடுபாடுடையவர்களால் மட்டுமே எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
கடவுள் வாழ்த்து மூலம் இயற்கையே இறைவன், இறைவனே இயற்கை என்ற மூல மந்திரத்தைக் கூறி ,எல்லையில்லாது எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இயற்கையை ஒரு பத்துக் குறள்பாக்களுக்குள்
அடக்கியுள்ளார் திருவள்ளுவர். இயற்கையின் தன்மைகள் யாவும் இறைவனின் குணங்களாக அதில்
சொல்லப்பட்டிருப்பதைப் பார்த்தாலே இது விளங்கும் .
எங்கும் நிகழும் இயற்கையின் பிழையற்ற ,பிசகற்ற, திட்டவட்டமான் செயல்கள் அதன் மெய்யறிவையும் ,
மென்தன்மையையும் ,அறவழியையும் சுட்டிக்காட்டுகின்றன .வற்றாத செல்வத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும் ,அவற்றையெல்லாம் தனக்கென
வைத்துக் கொள்ளாது விருப்பு வெறுப்பின்றி எல்லோர்ருக்கும் பகிர்ந்து கொடுப்பாதால்
பகவனாகும் இயற்கையும் ,தன ஐம்பொறிகளான நீர், நெருப்பு, நிலம் ,காற்று, வெளியை கட்டுப்படுத்தி எல்லையில்லாது விரிந்திருக்கும் இப்பேரண்டத்தையே ஆளுகிறது .அறவாழி அந்தணர்களைப்
போன்று இயற்கையும் ஒத்த சிந்தனைகளைக் கொண்டது. இயற்கைக்கு இணை இயற்கையே
என்பதால் அதற்கு இணையாக வேறொன்றை எவராலும் சுட்டிக் காட்ட முடியாது .
கடவுள் வாழ்த்தை அடுத்து வரும் வான் சிறப்பு, இயற்கை  வடிவிலான இறைவனை படம் பிடித்துக்
காட்டுகிறது. இதில் வரும் பத்துக் குறள்களும் மழை சார்ந்த அறிவியலை சமுதாய வாழ்க்கையோடு
இணைத்துக் கூறுகின்றன. ஒருவர் ஒரு கருத்தைக் கூறும் போது அதற்கு ஆதாரமாக் ஒரு பின்னணி
இருக்கவேண்டும். இது அவர் கூறும் கருத்துகளில் வெளிப்பட்டுத் தெரிவதில்லை..குறளறிவியலும்
அப்படிப் பட்டதே .குறளறிவியல்  நோக்கில் இனி திருக்குறளின் இவ்வதிகாரத்தைப் புரட்டுவோம் .

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று .

அதிகாரத்தின் முதல் குறளில் பெய்யும் மழை நீரை அமிழ்தம் எனக் குறிப்பிட்டுள்ளார் .இன்றைக்குக்
கிடைக்கும் நீர் வளங்களுள் மழை நீரே, தூய நீராக உள்ளதால் அதையே அமிழ்தம் எனக் கூறியுள்ளது
மிகப் பொருத்தமானது. அமிழ்தம் என்பது சுவை நீரன்று ,அது உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒரு
நீர்மப் பொருள் ;சாவாமைக்கு உற்ற மருந் து; அது  உண்மையில் சாதாரண நீர்தான். தேவர்கள் கடலைக்
கடைந்து அமிழ்தம் பெற்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன. இங்கே அமிழ்தம் என்பது குடிநீரைத்தான்
குறிப்பதாகக் கொள்ளவேண்டும் .இந்தப் புராணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு உண்மைச்
சம்பவமாகி இருக்கிறது. .உப்புக் கரிக்கும் கடல் நீரிலிருந்து ,தூய குடிநீரைப் பெற இன்றைக்கு
ஆட்சியாளர்கள் கடலைத்தான் கடைந்து கொண்டிருக்கின்றார்கள் .

ஒவ்வொரு குறள் மூலமும் ஓர் இனிய செய்தியை மக்களுக்கு உணர்த்திக் காட்டுவதே வள்ளுவரின்
தலையாய நோக்கம்.இக் குறளிலும் அது மறைபொருளாக உட் பொதிந்திருக்கிறது .நீர் ,சத்துக்களைக்
கொண்ட உணவுப் பொருளில்லை என்றாலும் ,சத்துக்களைப் பெற அதுவே ஊடகப் பொருளாக
விளங்குகிறது. அதனால் நீரின்றி உலகில் உயிர் வாழ்க்கை ஏதுமில்லை எனலாம். மனிதர்கள்
உணவின்றி சில வாரங்கள் கூட உயிர் வாழ்ந்துவிடலாம் ,ஆனால் நீரின்றி ஒரு சில நாட்களுக்கு
மேல் உயிர் வாழ முடியாது. என்று சொல்வதிலிருந்து நீரின் முக்கியத்தை உணரலாம் .இக் குறள்
மூலம் வள்ளுவர் சொல்லவரும் செய்தி என்னவென்றால் ,அமிழ்தம் போன்ற மழைநீரின்
ஒவ்வொரு துளியையும் வீணாக விரயமாக்கி விடாது ,பயனுறு திறன் மிக்க முறையில் பயன்படுத்தி
வளம் பெறவேண்டும்  என்பதாகும். இங்கு வரும் உலகம் என்பது உலகத்தில் வாழும் மனிதர்களை
மட்டுமின்றி எல்லா வகையான உயிரினங்களையும் குறிப்பிடுகின்றது .நீரோடு தொடர்பற்ற
உயிரினங்கள் எதொன்றுமில்லை என்பதை முழுமையாகப் புரிந்தவர்களே ,உயிரினகளின்  வாழ்க்கைக்கு
மழைநீர் அவசியமானது என்ற பொதுவான கருத்தைக் கூறமுடியும்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

உலகில் வாழப் புகும் மக்களுக்கு உண்ண உணவும், குடிக்க நீரும் கிடைக்க இயற்கை  தரும் உறுதிமொழி
இந்த மாமழையேயாகும் . உணவுப் பொருட்களின் விளைச்சலுக்கு நீர் இன்றியமையாதது .
நீர் ஒரு பொதுவான கரைப்பானாக இருப்பதால் இதில்  பெரும்பாலான தாது உப்புக்கள் கரைகின்றன .
அதனால் எல்லா உயிரினங்களும் நீரையே ஊடகமாகக் கொண்டு வாழ்கின்றன.
வேர் மூலம் இச் சத்துக்களை தாவரங்கள் உறிஞ்சி இலைப் பகுதிக்கு எடுத்துச் செல்கின்றன .
இலைத் துளைகள் மூலம் காற்றிலுள்ள கார்பன்டை ஆக்சைடை உறிஞ்சி ,ஒளிச் சேர்க்கை
மூல அவற்றை ஒன்றிணைத்து சக்கரைப் பொருளை உற்பத்தி செய்கிறது . இதுவே பிற்ப்பாடு
விளைபொருளாக மாறுகிறது. இதிலிருந்து உணவுப் பொருட்களுக்கு முக்கியமான மூலப்
பொருள் மழை நீர் என்பது தெளிவாகும் .
இக் குறளில் வள்ளுவர் நீரையும் ஓர் உணவுப் பொருளாகக் குறிப்பிட்டுள்ளார் .பொதுவாகத்
தூய நீரில் எவ்விதச் சத்தும் இல்லையென்றாலும் ,அது உணவுப் பொருட்களின் செறிமானத்திற்கும்,
உடலால் சத்துக்கள் உட்கிரகிக்கப் படுவதற்கும் நீரே உறுதுணையாக இருப்பதால் .நீரையும் இங்கு
உணவுக்குச் சமமாகக் குறிப்பிட்டுள்ளார் எனலாம் .தாது உப்புக்கள் கரைக்கப் பட்ட நீரில் ,
உலோகச் சத்துக்களும் ,வைட்டமின் போன்ற உயிர் சத்துக்களும் உள்ளன. வறுமையில் வாடுவோர்
தம் பசியைப் போக்கிக் கொள்ள நீரையே உணவாகக் கொள்வர்  
விண் இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

மழை பெய்யாமல் பொய் படுமானால் ,கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக் இருந்தும், பசியால் உயிர்கள்
வாடும் என்பது இதன் உட்பொருள் .இக் குறள் மூலம் உப்புக் கரிக்கும் கடல் நீர் விளைச்சலுக்குப்
பயன் படாது என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். மழை பொய்ப்பின் பசியால் உயிரினங்கள் ஏன்
வாடுகின்றன என்பதற்கான காரணத்தை அடுத்த குறளில் விளக்கியுள்ளார். மழை வளம் குன்றிப்
 போனால் உழவர்களுக்கு வேலையில்லை .அதனால் பயிர் விளைச்சலும் இல்லை. உணவுப்
பொருட்களின் உற்பத்தி தடைப்படுமானால் பசியால் உலகம் வருந்தும்.
கெடுப்பதூஉங்  கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்ப தூஉங்  எல்லாம் மழை

காலந் தவறாது மழை பெய்யாவிட்டால் மக்களின் சமுதாய வாழ்க்கை சீர் கேட்டுப் போகும்
என்பதைச் சுட்டிக் காட்டுவது இக் குறள் .மக்கள்  ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையை
நிலைப் படுத்திக் கொள்வதற்கு ஏதாவதொரு வேலை இருக்கவேண்டும் .வேலையற்றோர்
மட்டுமே நேரத்தை வெறும் எண்ணங்களை மேய்க்கச செலவிட்டு   இல்லாத கற்பனை உலகில்
உயிரில்லாப் பொருளாய் இருந்து கொண்டிருக்கின்றார்கள் .தீய எண்ணங்கள் எளிதில் மனதில்
பற்றிக் கொள்ள இது வாய்ப்பாக அமைகிறது. முன்னேறு வதற்க்குச் சுருக்கு வழியாகத்
தோன்றும் தீய வழிகள் தரும் மயக்கம் மக்களிடையே பரவும் போது சமுதாயமே அறவழி
மீறும் இழி நிலைக்குத்ச் தள்ளப் படுகிறது .மழை இல்லாது போனால் பலருக்கும்
வேலை இல்லாதுபோகும் .அது தனி மனிதனைக் கெடுத்து இறுதியில் சமுதாயத்தையே
கெடுக்கும். இக் கருத்தைப் பின்தொடரும் ஒரு கருத்து முன்னதிற்கு  முற்றும் எதிர்ப்போக்கானது .
தீய எண்ணங்களால் கெட்டுப் போனவர்கள் ,நல்ல சிந்தனை உள்ளவர்களாக நிலை மாற
உறுதுணை புரியும் இந்த மாமழை சமுதாயத்தைக் கட்டிக் காக்க வல்லது .மழை இல்லாவிட்டால்
நல்லோரும் தீயோராக மாறுவர்  என்றும் ,தவறாது மழை பெய்யின் ,தீயோரும் நல்லோராக
மாறுவர் என்றும் ஒன்றுக் கொன்று எதிர்ப்போக்கான கருத்தைத் திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.
 மழையில்லா விட்டால் நிலத்தில் புல் கூட முளைக்காது என்று மழையின் சிறப்பைக்
கோர்ரிய வள்ளுவர், மழையின் அறிவியலை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். .

நெடுங் கடலும் தன் நீர்மை குன்றும் தடித்தெழிலி
தான் நல்கா தாகி விடின்
மேகம் உருவாவதற்கு கடல் நீர் ஆவியாதலே காரணம் என்றும், மழை பொழிவதற்கு
மேகம் திரள்வதே காரணம் என்றும் கூறுவது இக் குறள். கடல் வளம் குன்றி அதன் புறப்பரப்பு
சுருங்குமானால், ஆவியாதலும் குறைந்து மழையும் குறையும். மழை குறையுமானால்
கடலும் தன் வளத்தை இழக்கும். கடல் வளம் என்பது அதிலுள்ள உப்புக்கள், ,உயிரினங்கள் ,
கனிமங்கள் போன்றவைகளாகும். நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கு பயனளித்த தூய மழை
நீர், வடிந்து இறுதியில் கடலையே சென்றடைகின்றது .அப்போது நிலத்தில் உள்ள உப்புக்களையும், உலோகங்களையும் அரித்தெடுத்து கடலில் கொண்டு சேர்க்கிறது .அதனால் கடல் வளம் சிறிதும்
குறையாமல் நிலப்படுத்துகின்றது  என்ற கருத்தை இக்குறள் பறை சாற்றுகிறது .
மழை பெய்யத் தவறி விட்டால் ,மக்கள் மகிழ்ச்சியையும் பிறர் பொருட்டுச் செய்யும் தானத்தையும்
தம் பொருட்டுச் செய்யும் தவத்தையும் விட்டுவிட்டு மனித இயல்பை இழப்பார்கள் .திருவிழாக்கள்
கொண்டாடுவதை மறந்து ,கடவுளைத் தொழ மறுப்பார்கள் .இதன் மூலம் மக்கள் மனித நேயத்தை த்
தொலைத்து விட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிவார்கள் என்ற கருத்தை வள்ளுவர்
கூறுகின்றார்.
நீரின்று அமையாது உலகெனின் யார் யார்க்கும்
வானின்று  அமையாது ஒழுக்கு .
'நீரின்றி அமையாது உலகு ' என்ற சொற்றொடர் ,உயிரின் பரிணாம வளர்ச்சிப் படியின் முதல்
கட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. முதன் முதலில் உயிரினங்கள் நீர் ஊடகத்திலே
உருவாயின .இயங்கிச் செல்வதற்கு ஏதுவாக உடலில் உறுப்புகள் ஏதும் இல்லாததால் ,
நீரில் மிதவலாக் வாழ்வதற்கு இது அனுகூலமாக இருந்தது. அப்படி உருவாகாது போயிருந்தால் ,
பரிணாம வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்கள் நிகழாது போயிருக்கும் .அதனால் உயர்
உயிரினங்களால் நிறைந்த, உயிரியல் சமநிலை பெற்ற உலகு உதிக்காது போயிருக்கும் .

மழை இல்லது போனால் ஒழுக்கம் கேட்டுப் போகும் என்பதை அவ்வதிகாரத்தில் வரும் சில
குறள்களில் சுட்டிக் காட்டிய வள்ளுவர், இக் குறளில் இப் பாதிப்பு எவரையும் விட்டுவைப்பதில்லை
இன்று தெரிவித்துள்ளார். துறவிகள் கூட விதி விலக்கல்ல என்பது இவர் முடிவு.

தனக்கும் தேவையான ,வேண்டிய ஒன்று தனுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் வரையில்
தான் ஒழுக்கம் நிலைப்படுகிறது. இந்த நம்பிக்கை பொய்த்துப் போய்விடும் என்ற நம்பிக்கை
ஊடறுக்கும் போது ,சூரிய ஒளி பட்ட பனித் துளி போல இருக்குமிடம் தெரியாமல் ஒழுக்கம்
ஒழிந்து போய்விடுகிறது .ஒழுக்கத்தின் மறைவு எப்போதும் ஒழுக்க மின்மையையே
பிறப்பிக்கிறது.புனைந்து சொல்லப்படும் ஒரு கதை இந்த உறை பொருளை உறுதி
செய்கிறது.
ஒரு சமயம் பல துறைவிகள் ஒன்று சேர்ந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர்.
அவர்களுடைய வழியில் கடிய நிலங்களும் ,  கொடிய மிருகங்கள் வாழும் காடுகளும் ,
செங்குத்தான மலைகளும் குறுக்கிட்டன .கல்லும் முள்ளும் குத்தினாலும் வருத்தம்
கொள்ளாது பயணத்தைத் தொடர்ந்தனர். வறட்சி காரணமாக வழியில் நீர் தட்டுப்பாடு
இருந்ததால் அவர்களுக்குத் தொடர்ந்து சில நாட்களுக்குத் தண்ணீர் கிடைக்காது போனது.
தண்ணீருக்காக அவர்கள் நெடுந் தொலைவு  கடக்க வேண்டி வந்தது .இனிமேல் ஓரடி
கூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு எல்லோரும் களைத்துப் போயிருந்தார்கள் .
அப்போது அருகே கிடந்த ஒரு சிறிய  குவளையில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக்
கண்டனர். அது வரை ஒருவர் பின் ஒருவராகச் சென்றவர்கள், தண்ணீரைக் கண்டவுடன்
பாய்ந்து முந்திச் செல்ல முயன்றனர். .எல்லோரும் ஒரே காலத்தில் குவளையைக்
கைப் பற்றியதால், குவளை உடைந்து கிடைத்த கொஞ்ச நீரும் சிந்திப் போனது. கண
நேரத்தில் ஒழுக்கம் மறைந்து ஒழுக்கமின்மை பிரகாசமாய் வெளிப்பட்டது.
மழை பெய்யாது எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்காவிட்டால் ஒழுக்கமின்மை
செழித்தோங்கும் என்ற வள்ளுவன் கூற்று இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.