திருக்குறளின் தெய்வீகக் குரல்
திருக்குறளின் அறம்,பொருள்,இன்பத்தில் இல்லாத ஒரு மறைபொருள்
பாயிரத்தில் இருக்கின்றதோ என்ற சிந்தனை நம் எண்ணத்தில்
நிலை கொண்டிருப்பதால் ,"திருக்குறளில் பாயிரம் "என்ற
தலைப்பைக் கட்டுரைப்போட்டிக்குத் தேர்வு செய்திருக்கின்றார்கள்
போலும்.
திருவள்ளுவர் மற்றும் அவருடைய ஒரே வாழ்நாள் படைப்பான திருக்குறள்
பற்றிய உண்மையான விவரங்கள் காலத்தின் கோலத்தில் நமக்கு முழுமையாகக்
கிடைக்காமல் போனதால் புதிதாக எதையோ தெரிந்து கொள்ள வேண்டும் என்ற
ஆர்வத்தில் அதைப் பற்றிய ஆய்வை ,அடிப்படை ஆதரங்கள் ஏதுமில்லாமல்
மேற்கொண்டு, வெறும் ஊகக் கருத்துகளையே அள்ளித் தெளித்து வருகிறோம்.
பாயிரம் என்பது வள்ளுவரின் படைப்பல்ல ;அது வேறொருவருடைய
இடைச் சொருகல் என்று வாதிட்டாலும்,அம்முயற்சியில் மறைந்திருக்கும் அந்த
படைப்பாளி யார் ,அவர் தன்னை மறைத்துக் கொண்டு அப்படிச் செய்தமைக்கு
யாது காரணம் என்பதையெல்லாம் ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகக் கூற
முடியாத நிலையே இன்னும் இருக்கிறது.
நோபல் பரிசு பெற்ற அறிவியலார் ,அவர் தம் ஆராய்ச்சியில் எவ்வளவு
முதன்மையானவராக விளங்குவாரோ ,அது போல வள்ளுவரும் அவர் தம்
படைப்பில்முதல்வராக ,பல் துறை முனைவராக விளங்குகிறார் .வள்ளுவர் ஒரு
பல்துறை அறிஞர் என்பதற்கு ,திருக்குறளின் 133 அதிகாரங்களில் கூறப்பட்டுள்ள
நுட்பமான பல்துறை சார்ந்த கருத்துகளே போதுமான சாட்சி
ஆன்மிக வாதிகள் தங்கள் கருத்துகளை இலக்கியப் படைப்புகள் மூலம்
மக்களுக்கு எடுத்துச் சொல்வதை வழக்கமாகக் கொண்டார்கள் . அந்த வகையில்
வள்ளுவரும் ஓர் ஆன்மிக வாதியே . ஓர் ஆன்மிகவாதி அறவியல் மட்டுமின்றி,
இல்லறவியலையும் அரசியலையும் வெகு இயல்பாகவும், துல்லியமாகவும்
விவரிக்கின்றார் என்றால்,அவருடைய படைப்பாற்றல் அளவிட்டறிய
முடியாததாகவே இருக்கும் .மிக சிறந்த அறிஞர்களுக்கு இது ஒரு பொதுத் தன்மையே .
திருவள்ளுவர் ஓர் அறிவியலாரும் கூட என்பதை குறளின் பாயிரத்தில் கூறப்பட்டுள்ள
கருத்துகளே ஒருசேரப் பறைசாற்றுகின்றன .
பேரளவிலான பேரண்டமாக ,அண்டமாக ,விண்மீனாக, விண்மீனைச் சுற்றும் கோளாக
இருந்தாலும், அல்லது நுண்ணிய மூலக்கூறாக ,அணுவாக ,அணுக்கருவாக ,அணுக்கருவைச்
சுற்றும் அடிப்படைத் துகளாக இருந்தாலும் எல்லாம் இயற்கையின் இயக்கமே. இதில்
பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான நம் வாழ்க்கையும் வேறுபட்டதில்லை.
துறைவாரியாகப் பிரிந்து அறிவியல் வளர்ந்த இன்றைய கால கட்டத்தில் இதை
எல்லோரும் அறிந்திருந்தாலும் ,முழுமையாகப் புரிந்து கொண்டு வாழ்பவர்கள் வெகு
சிலரே .நம்முடைய புரியாமையே நம்மிடையே கூடிவாழ்வதை விடக் கொன்று வாழும்
போக்கைத் தூண்டி வருகிறது.
பிறப்பும் இறப்பும் இயற்கையாக இருப்பதைப் போல ,இடைப்பட்ட குறுகிய
வாழ்க்கையும் இயற்கையாக இருந்தால் இனிமைக்கு யாதொரு குறையுமில்லை .இதற்கு
இறவனைப் புகழ்ந்து துதி பாடுவதை விட இயற்கையைப் புரிந்து கொள்வது மிகவும்
அவசியமாகும் .இதை முழுமையாக உணர்ந்து கொண்ட திருவள்ளுவர் ,தன்னுடைய
திருக்குறள் நூலுக்கு அளித்தமுன்னுரையே இந்த பாயிரம் எனலாம்.
திருக்குறளின் கடவுளுக்கு எவ்வித உருவமும் இல்லை,பெயர் ஏதும் வழக்கப்படவில்லை,
ஆனால் மக்கள் முயன்று பெறவேண்டிய மென்மையான நற்குணங்கள் மட்டும் கடவுளின்
தன்மையாகக் கூறப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டு இந்த பேரண்ட
வெளியில் இருக்கக் கூடிய ஒன்று இயற்கை மட்டுமே .எனவே இயற்கையையே
திருவள்ளுவர் இறைவனாக உருவகப் படுத்திக் கொண்டார் எனலாம். இயற்கையை
இறைவனாக்கித் தொழுவதைவிட ,அதாவது இயக்கத்தை ஓய்வு படுத்துவதை விட ,
செயலை வெறும் செயலின்மையாக்கி வெற்றுச் சொல்லாக்குவதை விட ,இறைவனை
இயற்கையாக்கி உணர்வது ,அதாவது ஓய்வை இயக்க நிலைக்கு மாற்றுவது ,சொல்லைச்
செயலாக்குவது ,சாகாத சமுதாயத்திற்கு காலமெல்லாம் நலம் பயக்கும் என்ற
கருத்து திருக்குறளின் முதல் அதிகாரமான இறைவணக்கத்தில் எதிரொலிப்பதைக்
காணமுடிகிறது
திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளின் குணங்களைக் குறிப்பிட வாலறிவன் ,
மலர்மிசை ஏகினான் ,வேண்டுதல் வேண்டாமை இலான் ,பொறிவாயில் ஐந்தவித்தான் ,
தனக்குவமை இல்லாதான் ,அறவாழி அந்தணன் ,எண்குணத்தான் போன்ற அடைமொழிகள்
பயன்படுத்தப் பட்டுள்ளன
வாலறிவன் என்றால் குழப்பம் தராத தூய அறிவினை,மெய்யறிவினை உடையவன்
என்றும், மலர்மிசை ஏகினான் என்றால் தன மனதில் மென்மையான எண்ணங்களை
ஏந்தியவன் என்றும் ,வேண்டுதல் வேண்டாமை இலான் என்றால் ,விருப்பு
வெறுப்பு அற்றவன் என்றும் ,பொறிவாயில் ஐந்தவித்தான் என்றால் புலன்களை
அடக்கி ஆள்பவன் என்றும் ,தனக்குவமை இல்லாதான் என்றால் ,ஒப்பிட்டுச் சொல்ல
இணையாக வேறொன்றும் இல்லாதவன் என்றும் அறவாழி அந்தணன் என்றால்
அறவழியே என்றும் தன்வழி என்று உறுதி கொண்டவன் என்றும் ,எண்குணத்தான்
என்றால் சான்றோர்க்குரிய எட்டுக் குணங்களையும் முழுமையாக பெற்றவன் என்றும்
பொருள். இதிலிருந்து திருவள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்பது கூட்டுச் சமுதாயம்
மகிழ்ச்சியில் திளைத்திருக்க மனிதர்கள் பெற்றுக்கவேண்டிய நல்ல குணங்களின்
மொத்த வடிவம் என்றும், அதற்க்கு எனத் தனி உருவம் ஏதும் இல்லை என்றும்,
இறைவணக்கம் என்பது அந்த நல்ல குணங்களைப் நாமும் பெற்றுச் சிறக்க
அதைப்பற்றி நினைத்து ,முனைந்து அவ்வழி நடக்க முற்படுவதாகும் என்றும் கூறலாம் .
உருவ வழிபாட்டை விட ,உருவமில்லா வழிபாடு இறைத்தத்துவத்தைக் கூறும்
இயற்கையை இயல்பாக அறியத்தூண்டுகிறது .எனினும் சென்றையும் இடத்தை விடச்
செல்லும் வழியே முக்கியமாகப் போனதால் ,அந்த இடம் கண்ணுக்குத் தென்படாமல்
போனது மட்டுமில்லை ,அது எந்த இடம் என்பதையே மறந்து போய்விடும் சூழ்நிலைக்குத்
தள்ளப்பட்டுவிட்டோம் .அறியாத செல்லுமிடங்களுக்குத் தெரியாத வழித்தடங்கள் ,
நம்முடைய வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடுகின்றன.
திருக்குறளுக்கு இறைவனின் புறத்தோற்றம் ,பெயர், மூலம் இவைகளெல்லாம்
முக்கியமில்லை. இறைவனை ,இறைவன் என்று ஏற்றுக் கொள்ள அடையாளமாக
இருந்த சிறப்பியல்புகளையே கருத்திற் கொண்டது. அகவியல் பண்புகளை அறியாமல்
வெறும் புறவியல் பண்புகளினால் ஒன்றின் இயல்பை முழுமையாக அறிந்து பயனீட்ட
முடியாது என்பதால்,திருக்குறள் இறைவனின் அகவியல் பண்புகளை மட்டுமே
முழுமையாக மக்களுக்குத் தெரிவிக்க முயலுகிறது. இறைவன் இயற்கைதான்
என்றாலும் மனிதர்களுடைய அணுகுமுறைகளே இறைவனை இல்லாதவானாக்கி விடுகின்றன
என்ற மறைபொருளை இதன் மூலம் குறிப்புணர்த்தியுள்ளார் .
இயற்கையின் முழு ஒத்துழைப்பினால் பெற்ற இப்பிறப்பைப் பயனுள்ளதாக்கிக்
கொள்ள வேண்டும் என்றால், அது நமக்குப் பயனளித்த இயற்கையை அப்படியே
விட்டுவைப்பதுதான் .இதன் நோக்கம் ,அது நம்மைப் போல பிறர்க்கும், பிறரைப்
போல நமக்கும் இம்மையிலும் மறுமையிலும் தொடர்ந்து பயனளிப்பதை
மேம்படுத்துவதாகும் .இதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால்
இயற்கையை நேசிப்பதாகும் ,அதுவும் பிறந்த அந்தக் கணத்திலிருந்தே ,இறைவனின்
அகவியல் பண்புகளைத் தெளிவாக அறிந்து கொண்டோர் மட்டுமே ,இயற்கையைப்
போற்றி தம் வாழ்கையை இயற்கையோடு இணைந்து செல்லுமாறு அமைத்துக் கொண்டு
இனிமையாகக் கழிப்பர். அந்த அடிப்படையில் கடவுள் வாழ்த்து திருக்குறளின்
முதல்
அறநெறியாகச் சொல்லப்பட்டிருக்கிறது .உலகில் பிறந்த எல்லா உயிரினங்களும் ,தங்களது
இம்மையும் மறுமையும் இனிதாய் இருக்க ,இறைவன் என்ற புனைப் பெயரில்
இயற்கையைப் போற்றி வணங்க வேண்டும் என்பது கடவுள் வாழ்த்தில் வரும் பத்துக்
குறள்களும்ஒரு சேரக் கூறுகின்றன. வாழ்த்துதல் ,வணங்குதல் ,அடிசேருதல் ,போற்றுதல்
என்பன யாவும் உயர்வான ஒன்றைப் பற்றி நினைத்து அந்த ஒன்றின் வழி நிற்றலைக்
குறிக்கும் என்று பரிமேலழகர் குறிப்பிட்டுள்ளது இதற்கு இணக்கமாய் இருக்கிறது .
இனிக் குறளின் முதல் அதிகாரமான் கடவுள் வாழ்த்தில் வந்துள்ள பத்துக் குறள்களில்
மிளிரும் இயற்கையை ,கருத்துகளில் செயற்கைக் கலப்பு ஏதுமின்றி அறிந்து கொள்ள
முயல்வோம் .
குறள் -1
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" .
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன .அதுபோல
உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது .
கடவுளை இயறகையாகக் கொண்டால்.........
அகரம் தொடங்கி எல்லா எழுத்துக்களினாலும் குறிப்பிடப்படுகின்ற பொருட்கள்
யாவும் உலகிற்கும் முதலான இப்பேரண்ட வெளியில் தோன்றி இருப்பதற்கு
மூலாதாரம் இயற்கையேயாகும்
இதன் உட்பொருள் எல்லாமே கடவுள் ,கடவுள் தான் எல்லாம் என்பதாகும்.
அதாவது எழுத்துக்களுக்கெல்லாம் எப்படி அகரம் முதலாய் அமைந்ததோ
அதுபோல இவ்வுலகிற்கு இயற்கை முதலாய் அமைந்தது ..
கடவுளிடம் இருப்பதாக நாம் கற்பிக்கும் எல்லாக் குணங்களும் இயற்கைக்கு
மட்டுமே ஒரு சேரப் பொருந்தி வருகின்றன .இயற்கையைப் போல ஆதியும் அந்தமும்
கடவுளுக்கும் இல்லை; அளவற்ற சக்தி கடவுளுக்கும் உண்டு .வேண்டியவன்
வேண்டாதவன் என்று வேற்றுமை பாராட்டாமல் உதவி செய்யும் மனப்பக்குவம்
கடவுளிடமும் உள்ளது. பன்முகத் தோற்றம் கடவுளுக்கும் பொருந்தும் .
இவ்வொற்றுமைகள் .கடவுளும், இயற்கையும் ஒரே மூலத்தின் இரு வேறு பெயர்கள்
என்பதைத் தெரிவிக்கின்றன .
குறள் -2
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா அர் எனின்"
தூய அறிவுடைய இறைவனின் திருவடிகளைத் தொழா தவர்களின் கல்வியால் யாதொரு
பயனும் இல்லை.
இறைவன் ஒரு தத்துவம் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்களே இறைவனைப்
புறத்தே தேடிக் கொண்டிருக்கின்றார்கள் .நாம் எதிர்பாக்கும் மனிதன் எப்படி
இருந்தால் இந்தச் சமுதாயம் சாகாதிருக்கும் என்று நினைத்துப் படைக்கப்பட்ட
கற்பனை மனிதனே இறைவன் .சான்றோர்களையும் ,மெய்யறிவுடையோர்களையும்
இறைவனுக்கு ஒப்பாகப் பேசுவதிலிருந்து இந்த உள்ளுணர்வு புலப்படுகிறது.
மெய்யறிவுடைய இயற்கையைப் பாதுகாக்க வில்லையெனில் ,கற்றதினால்
யாதொரு பயனும் இல்லை .நிழலான இறைவனால் விளக்குவதை விட ,மெய்யான
இயற்கையைக் கொண்டு விளக்குவதே திருவள்ளுவரின் நோக்கமாகும் .
குறள் -3
"மலர் மிசை ஏகினான் மானடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"
மலரில் வீற்றிருக்கும் கடவுளின் திருவடிகளைத் தொழுகின்றவர் இவ்வுலகில்
நிலைத்து வாழ்கின்றார் .
வன் தன்மையை மறந்தும் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்த விரும்பாத காரணத்தினால்
பூவைப் போன்று மென்மனதுடைய அறநெறியாளர்களை போற்றிப் பணிந்தால்
அவர் புகழ் நிலத்து நிற்கும் .
குறள் - 4
"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"
விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனைப் பின்பற்றி ஒழுகுவோர்க்கு என்றைக்கும்
துன்பம் இல்லை
விருப்பு வெறுப்பிலாத இயற்கையைப் போல வாழும் ஒருவர்க்கு என்றைக்கும்
துன்பம் வருவதில்லை. சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு உண்டாகுமென்றால்
தன் விருப்பத்தைக் கூட வெறுக்க வேண்டும். சமுதாயத்திற்கு அனுகூலமானது
என்றால் தன வெறுப்பைக் கூட விருப்பமாக்கிக் கொள்ளவேண்டும். அவர்களுக்கு
வேண்டுதல் என்பதும் வேண்டாதது என்பதும் அர்த்தமற்றது .இந் நிலையே
வேண்டுதல் வேண்டாமை இல்லா நிலை என்று கூறலாம். இவர்களே சமுதாயத்தின்
காவலர்கள் என்பது திருவள்ளுவரின் கருத்து..
குறள் -5
"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு"
துன்பத்தைத் தரக்கூடிய இரு வகையான வினைகளை யாற்றும் நிலை இறைவன்
என்ற மெய்ப்பொருளை உணர்ந்து உணர்த்துவோர்க்கு வருவதில்லை. தனக்கு
மட்டுமின்றி எல்லோருக்கும் நன்மை பயக்கின்ற வினை நல்வினை ,யாரேனும்
ஒருவர்க்கு தீமைதரக்கூடிய வினை தீவினை .நல்வினைகள் சமுதாயத்தை
வாழவைக்கும், தீவினைகள் அதை வேரறுக்கும் .
ஒரு வினை செய்யப்படுவதற்குக் காரணம் வினைபயனே .அது தரும் மகிழ்ச்சியை
நுகர விரும்பும் எல்லோரும் வினையாற்ற விரும்புகின்றார்கள் .ஆனால்
வினைப்பயனுக்காகவே வினையாற்றினால் காலப்போக்கில் எல்லோருடைய
எண்ணங்களிலும் தன்னலச் சிந்தனைகளே மேலோங்கும் இது பகைமையை வளர்ந்து
வாழ்வின் இனிமையை அழித்துவிடும் .அதனால் இக்குறள் வழியாக
வள்ளுவர் கூற நினைத்த கருத்து வாழ்க்கையை இருளூட்டக் கூடிய வினைப்பயன்
கருதிச் செய்யப்படுகின்ற இரு வினைகளையும் , இயற்கையைப் பின்பற்றி
வாழ்வோர் தான்
செய்யுமாறான வாய்ப்பு வராமல் பார்த்துக் கொள்வர் .
குறள் -6
" பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்"
ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எவர் இறைவனைப் போல
வாழ நினைக்கின்றார்களோ ,அவர்களே நிலைபெற்ற நல்வாழ்க்கை பெறுவார்
ஐம்பொறிகளின் கட்டுப்பாடான ஆசைகளின் வரம்பிற்கு அப்பாற்பட்ட முரட்டுத்தனமான
ஆசைகளை அடக்கியது இயற்க்கை அது போன்ற குணத்தைப் பெற இயற்கையை
போற்றி இயற்கையாக வாழ நினைக்க வேண்டும்.உண்மையாகவே பொறிகளின்
வாயிலாக விளைந்த ஆசைகளை மட்டுப்படுத்தி வாழ்வார்கள் நீண்ட நாள் வாழும்
வாய்ப்பைப் பெறுகின்றார்கள் .நீண்ட நாள் வாழ்கின்றவர் ஒழுக்க நெறி நின்றவராவார் .
எனவே அவர் நீண்ட நாள் வாழ்ந்தால் சமுதாயம் நற்பயனடைகின்றது. .
குறள் -7
"தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது"
உவமை இல்லாதவாறு பல சிறந்த குணங்களைப் பெற்றிருக்கும் இறைவனைப்
போற்றாத வரின் மனக் கவலைகளைப் போக்க முடியாது
உவமை இல்லாதவாறு பல சிறந்த தன்மைகளை உடைய இயற்கையைப்
போற்றாவிட்டால் ,அதைப்போல நாமும் கவலைகள் யற்று பிறருடைய மனக்
கவலைகளைப் போக்க முடியாது.மனதில் தோன்றும் மனக் கவலைகளுக்கு
மருந்தொன்றும் இல்லை .மிருகங்களும், தாவரங்களும் இறைவனைத் தொழுவதில்லை .
ஏனெனில் அவைகளெல்லாம் தங்களுடைய வாழ்க்கையை இயற்கையோடு இணைந்து
செல்லுமாறு இயற்கையாய் வாழ்கின்றன.
இயற்கைக்குப் புறம்பான எந்தப் பரிணாம வளர்ச்சியும் பயனளிப்பதில்லை .அது
காலப்போக்கில் பிறவற்றை அழித்துத் தானும் அழிந்து போகும் .இதற்க்கு விதிவிலக்கு
இல்லை. மனிதர்கள் தாம் பெற்ற ஆறறிவில் மெய்யறிவைப் புறக்கணித்து வருவதால்
உயிரினங்களில் அவன் மட்டுமே இயற்கையை மீறிய செயற்கை நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகிறான்.இதனால் அழிவு என்பது ஒரு காலகட்டத்தில் பேரளவில்
நிகழக் கூடிய சூழ்நிலை
ஏற்படும். இது ஆக்கத்தில் மறைந்திருக்கும் அழிவு .அதனால்தான் தனக்குவமை இல்லாத
இயற்கையைப் புரிந்து கொண்டு இயற்கையாக வாழ்ந்தால் யாருக்கும் மனக்கவலை
இல்லை என்று திருவள்ளுவர் கருதினார் போலும் .
குறள்-8
"அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்குக் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது"
இக் குறள் இயற்கையையும் .இறைவனையும் அறக்கடவுளாக வர்ணிக்கிறது. .அதன்
வழியைப் பின்பற்றாது பிறவழி செல்வோர் வாழ்கையை இனிமையாகக் கடக்க
முடியாது என்ற கருத்தை எடுத்தியம்புகிறது . அறநெறி என்பது
ஒவ்வொருவரிடத்திலும் காட்டாயப்படுத்தப்பட்டு வருவதன்று .அது எதற்காகத்
தேவை என்பதை உணர்ந்து
இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலே அறநெறி தழைக்கும்.அதற்கு எல்லோருக்கும்
பாடமாகவும் ,வழிகாட்டியாகவும் இருப்பது இயற்கையே .
இக்குறளில் எடுத்தாளப் பட்டுள்ள அந்தணர் முரண்பாடுடைய சொல் போலத் தோன்றலாம்.
இதற்கு அந்தச் சொல் பூணுல் அணிந்து,வேதங்கள் கற்ற, பார்ப்பன குளத்தில் பிறந்த
ஒரு குறிப்பிட்ட சமுதயத்தினரைக் குறிப்பிடப் பயன்படுத்தப் பட்டு வருவதுதான். .
திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் அச் சொல்லுக்கு வேறு பொருண்மை இருந்திருக்கலாம்.
(நாற்றம் என்ற சொல் சொல் பொருள் மாறிப்போனதைபோல) அல்லது அத்தகைய
சிறப்புடைய சொல்லுக்குத் தகுதியுடையவர்கள் தாங்களே என்று
வடநாட்டிலிருந்து புதிதாய் குடியேறியவர்கள் அச்சொல்லைத் தத்
தெடுத்திருக்கலாம் இக் குழப்பத்திற்க்கான விடையை திருவள்ளுவரே நீத்தார்
பெருமை எனும் அதிகாரத்தில் அந்தணர் யார் என்று விளக்கியுள்ளார்.
குறள் -9
"கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை"
எல்லா உயிரினங்களும் இனிதே வாழ, எட்டுக் குணங்களையும் ஒரு சேரப்
பெற்றிருக்கின்ற இறைவனை வணங்காதாரின் குறிக்கோளும் அதைப் எட்டும்
வழிமுறையும் தீயனவாகவே
இருக்கும் என்று இக்குறளுக்குப் பொருள் உரைக்கலாம். .
இறைவனை இயற்கை என்றும் ,இயற்கையை இறைவன் என்றும் கூறும்போது
இந்த எட்டுக் குணங்களும் இரு அமைப்புகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்.
இறைவனின் ,ஆதியும் அந்தமும் இல்லாமை, அளப்பரிய ஆற்றல் ,வரையறுக்க
முடியாத திறமை,எங்கும் நிறைந்திருத்தல் போன்ற குணங்கள் ,இயல் வாழ்க்கையில்
மனிதர்கள் எவ்வளவு முயன்றாலும், பெறமுடியாத, பெறவே முடியாத குணங்களாகும்.
இவையாவும் இறைவனும் இயற்கையும் மனிதர்களைக் காட்டிலும் வலிமையானவர்கள்
என்பதை தெரிவிக்கக் கற்பிக்கப் பட்ட தனிபெருஞ் சிறப்புகளாகும். ஒரு
மனிதன் எவாளவு முயன்றாலும் தன வாழ்நாளில் பெறவே முடியாத இக் குணங்களைப்
பெறவேண்டி எவரும் வலியுறுத்த மாட்டார்கள்.எனவே என்குனத்தில், உலகியல்
வாழ்க்கைக்கு ஒவ்வாத
இத்தைய குணங்களுக்கு இடமில்லை என்றே முடிவு செய்யாலாம்.
மெய்யறிவைப் பெற விரும்புதல், ,எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்,,தீயன
ஒதுக்கி தூய்மையான மனதைப் பெறுதல் ,ஈகை,கைம்மாறு கருதாது ஒப்புரவு செய்தல்,
நடுவு நிலைமை மற்றும் ஒருபாற்கோடாமை பேணுதல் ,பற்றற்று செயலாற்றுதல்,
பொறுமை,அடக்கம் கொண்டிருத்தல் போன்றன் குணங்களே மக்களிடம் திருவள்ளுவர்
எதிர்ப்பார்த்தது இந்தக் குணங்கள்இயற்கையிடம் இயபாகவே உள்ளது . இறைவனிடம்
ஏற்றப் பட்டுள்ளது.
குறள்-10
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்" .
இறைவனை நினைத்து வாழ்கின்றவர்கள் பிறவியை மகிழ்ச்சியாகக் கடக்கின்றார்கள் .
மற்றவர்கள் அப்படி இல்லை.. இயற்கையை நேசித்தவர்கள், நேசிக்காதவர்களுக்கு உள்ள
வேறுபாடும் இதுதான்.
இயற்கையின் திருவிளையாடல்களைக் கண்டு திகைத்துத் திணறிய ஆதிகாலத்து
மனிதர்கள்,புரிதலும், நல்லிணக்கமும் வேண்டி இயற்கையை இறைவனாக்கித்
துதித்தார்கள் .ஆனால் இறைவன் வேறு ,இயற்கை வேறு. .முன்னது காட்சி ,உருவமானது ,
பின்னது பிம்பம் ,உருவகமானது .இயற்க்கை என்பது செய்முறைக் கல்வி ,இறைவன்
என்பது தத்துவக் கொள்கை.மனப்பக்குவம் உள்ளவர்களால் மட்டுமே இவையிரண்டிற்கும்
புறத்தே தெரியாத தொடர்பை அகத்தே அறிவர். .அப் பணியை அன்றைக்கே மௌனமாய்
செய்து காட்டியவர் திருவள்ளுவர். அதற்கு திருக்குறளின் இந்தப் பாயிரமே
சாட்சி.
No comments:
Post a Comment