வண்ணத்துப் பூச்சி விளைவு
சில சமயங்களில் அற்பச் செயல்களே மிகப்பெரிய எதிர்பாராத இழப்பை ஏற்படுத்திவிடுவதுண்டு .இதைத்தான் விளையாட்டு வினையாகி விடும் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் .ஒன்றுகொன்று தொடர்பில்லாதனவற்றிற்கும் இதை உட்படுத்தி அதற்கு பட்டாம் பூச்சி விளைவு(Butterfly effect) என்று பெயர் சூட்டியிருகின்றார்கள்.அமெரிக்க தூதரகத்தில் மாட்டியிருந்த ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் படம் காற்றில் ஆடிக் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது என்பதால் வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி இயற்கையெய்தினார் என்றும் காலையில் எழுந்தவுடன் உன் (அல்லது கழுதை) முகத்தில் முழித்தேன் அதனால் எனக்கு பரிசுச் சீட்டில் முதல் பரிசு விழுந்தது என்றோ அல்லது சாலை விபத்தில் சிக்கிக் கொண்டேன் என்றோ கூறுவதும் பட்டாம் பூச்சி விளைவாகும்.இந்தச் சொல் பயன்பாட்டிற்கு வந்தது ஒரு எழுத்தாளரின் கற்பனையே .ஒரு நூலாசிரியர் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்படக் காரணம் மெக்சிகோ நாட்டில் ஒருவர் அங்கே பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சியைப் பிடித்து அதன் இறக்கைகளை ஒன்று சேர்த்ததுதான் என்று தன் நூலொன்றில் விளையாட்டாகக் குறிப்பிட்டிருந்தார் .இந்த விளக்கமே 'வண்ணத்துப் பூச்சி விளைவு ' என்ற சொல்லைத் தந்தது .
வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகளில் உள்ள விதவிதமான வடிவங்களும் நிறங்களும் கண்களுக்கு இனிய விருந்தாகும். .அதனால் பார்ப்பதற்கு அழகாக ,இளமையாகத் தோன்றுகின்ற பெண்களின்கூட்டத்தை வண்ணத்துப்
பூச்சிகள் என்று இளைஞர்கள் வர்ணிப்பார்கள் .படித்து முடித்துவிட்டு எண்ணிலாக் கனவுகளுடன் கல்லூரியை விட்டு வெளியேறிச் செல்லும் மாணவர்களை வண்ணத்துப் பூச்சி போலப் பறந்து செல்கின்றார்கள் என்று கூறுவார்கள் .பிடிபட்ட ஒரு வண்ணத்துப் பூச்சியை விடுவிக்கும் போது அது தன் இறக்கைகளை படபடவென்று அடித்துக் கொண்டே பறக்கும் .ஒரு செயலைச் செய்வதற்கு முன்னர் ஒருவர் படபடவென்றிருப்பாரேயானால் அவர் வண்ணத்துப் பூச்சியைப் பெற்றிருக்கின்றார் என்று குறிப்பிடுவார்கள்.
வண்ணத்துப் பூச்சி கலைச்சொற்களிலும் பங்கேற்று வருகிறது , குழாய்களில் பாய்மத்தைச் செலுத்தவும் ,பாய்வை மட்டுப்படுத்தவும் ,தடுத்து நிறுத்தவும் ஒருவழிச் செலுத்திகளைப் (valve) பயன்படுத்துகின்றார்கள் .இதிலொன்று வண்ணத்துப் பூச்சி ஒரு வழிச் செலுத்தியாகும் (Butterfly valve).இரு அரைவட்டவடிவ உலோகத்தகட்டை குழாயின் உட்புறம் சரியாகப் பொருந்துமாறு பொருத்தி ,அவை குழாய்க்கு க் குறுக்காக விரிந்திருக்கும் போது பாயமத்தை தடுத்தும் நெடுக்காகச் சுருங்கி இருக்கும் போது பாய்மத்தைச் செலுத்தியும் செயல்படச் செய்வார்கள்.இது பறக்கும் வண்ணத்துப் பூச்சி போல இருப்பதால் அதற்கு அப்படிப் பெயர் சூட்டினர்
No comments:
Post a Comment