மூன்றெழுத்துக் கவிதை
முனைவர் .மெ. மெய்யப்பன்
நிலவு
ஒரு மூன்றெழுத்துக் கவிதை.
ஒற்றைச்சொல்
ஓராயிரம் அர்த்தங்களி்ன் சுருக்கம்
விண்ணில்
வரையப்பட்ட சித்திரக் காவியம்
இது
இறைவன் எழுதிய இலக்கியம்
கும்மிருட்டாய் இருந்தாலும்
கூடி இரசிக்க கோடிப்பேர்
அங்குமிங்கும் மினுக்கும் கைவிளக்குடன்
எங்குமிருப்பர் விடியும் வரை
மாதமொருநாள் ஓய்வென்றாலும்
அமைதியாத் தவம் கிடப்பர்
.
அன்றைக்கும்
அம்மா வீட்டில் வாசித்தாள்
அப்புறம்
ஆசிரியர் பள்ளியில் வாசித்தார்
இன்றைக்கும்
அறிவியலார் அதையே வாசிக்கின்றனர்
என்றைக்கும்.
முடிவிலா மூன்றெழுத்துக் கவிதை
நிலவு சிரித்தாலும் கவிதை
குழந்தைகளுக்குப் பிடித்த கவிதை
வருந்தி மெலிந்தாலும் கவிதை
கவிஞர்களுக்குப் பிடித்த கவிதை
ஓடி ஒளிந்தாலும் கவிதை
பூமிப்பந்தோடு கண்ணாம்பூச்சிக் கவிதை
No comments:
Post a Comment